தர்மபுரி அருகே, வீடு வீடாகச் சென்று நவீன ஸ்கேன் கருவி மூலம் கர்ப்பிணியின் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? என்று முன்கூட்டியே பாலினம் கண்டறிந்து சென்னதுடன், சட்ட விரோத கருக்கலைப்பிலும் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவருடைய மனைவி வனஜா (வயது 27). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வனஜா, மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஒருவேளை, மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்து விட்டால், வளர்த்து ஆளாக்குவது சிரமம் எனக்கருதிய அவர்கள், கருவை கலைக்கும் முடிவுக்கு வந்தனர்.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று முன்கூட்டியே ஸ்கேன் செய்து பார்ப்பதும், பார்த்துச் சொல்வது குற்றம் ஆகும். அதனால், கமுக்கமாக இந்த காரியத்தைச் செய்துவிட தீர்மானித்த வனஜாவும், கணவரும், இது தொடர்பாக சில புரோக்கர்களை அணுகியுள்ளனர்.
இந்நிலையில் புரோக்கர் ஒருவர், வனஜாவை தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பரிசோதனையில், அவருடைய வயிற்றில் இருப்பது பெண் சிசு என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வனஜாவின் ஒப்புதலின்பேரில், பெண் சிசுவை வயிற்றிலேயே கலைத்து விடுவதற்கான ஏற்பாடுகளையும் புரோக்கர்கள் செய்தனர்.
சட்ட விரோத காரியம் என்பதால், வனஜாவை கண்களைக் கட்டி, ஒரு காரில் கருக்கலைப்பு செய்யப்படும் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மே 14- ஆம் தேதி கருக்கலைப்பு செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாள்களில் வனஜாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வனஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடந்த பரிசோதனையில், வனஜாவுக்கு கருக்கலைப்பு செய்த கும்பல், சிசுவின் தலையை மட்டும் கர்ப்பப்பையை விட்டு வெளியே எடுத்திருப்பதும், சிசுவின் பாதி உடல் பாகங்கள் கர்ப்பப் பையிலேயே தங்கிவிட்டதும் தெரிய வந்தது. அதனால்தான் சிசுவின் அழுகிய உடல் பாகங்களால் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
பின்னர், கர்ப்பப்பையில் இருந்த சிசுவின் எஞ்சிய உடல் பாகங்களை அப்புறப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்தனர்.
மேலும் இதுபற்றி மருத்துவர்கள், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு தகவல் அளித்தனர். கருக்கலைப்பில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரிக்க, மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) கனிமொழி தலைமையில் கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, மே 28- ஆம் தேதி, தர்மபுரி ராஜாபேட்டை ஏரிக்கரை பகுதியில் வெங்கடேசன் என்பவருடைய வீட்டில் 6 கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கனிமொழி, தர்மபுரி நகர காவல்நிலைய ஆய்வாளர் நவாஸ், எஸ்ஐ சுந்தரமூர்த்தி ஆகியோர் சந்தேகத்திற்குரிய வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அந்த வீட்டில் ஸ்கேன் உபகரணம் மூலம் கர்ப்பிணிகளின் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என முன்கூட்டியே பாலினம் கண்டறிந்து கூறி வந்தது தெரிய வந்தது. சட்ட விரோதமாக கருக்கலைப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வீட்டில்தான், வனஜாவுக்கும் ஸ்கேன் பரிசோதனையும், கருக்கலைப்பும் நடந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மையத்தில் வேலை செய்து வந்த 3 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பத்தூர் ராஜமங்கலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவசக்தி மனைவி ஜோதி (வயது 33), தேவராஜ் மகன் கார் ஓட்டுநர் சதீஸ்குமார் (வயது 38), கோவிந்தசாமி மகன் ஆட்டோ ஓட்டுநர் சுதாகர் (வயது 37), தர்மபுரி அழகாபுரியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி செவிலியர் கற்பகம் (வயது 38), பாப்பாரப்பட்டி அண்ணா காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரிதா (வயது 40), தர்மபுரி பாரதிபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஆட்டோ ஓட்டுநர் குமார் (வயது 38), செட்டிக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ் (வயது 33) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்களில் சதீஸ்குமார் போலி மருத்துவராக செயல்பட்டு வந்திருப்பதும், ஏற்கனவே இதேபோன்ற சட்ட விரோத கருக்கலைப்பு சம்பவத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் டி.எஸ்.பி. வினோத் விசாரணை நடத்தினார். இதில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய, இந்த கும்பல் ஒரு கையடக்க நவீன ஸ்கேன் கருவியை பயன்படுத்தி வந்துள்ளது. கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ள தம்பதியினர், சட்ட விரோதமாக கருக்கலைப்புக்கு தயாராக உள்ள பெண்களை பிடித்து வருவதற்காகவே ஒவ்வொரு ஊரிலும் கமிஷன் அடிப்படையில் புரோக்கர்களை நியமித்துள்ளனர்.
நவீன ஸ்கேன் கருவி மூலம் பாலினம் அறிந்து கொள்ள 8 ஆயிரம் ரூபாயும், சட்ட விரோத கருக்கலைப்புக்கு 20 ஆயிரம் ரூபாயும் வசூலித்து வந்துள்ளனர். இதுமட்டுமின்றி, திருமணத்திற்கு முன்பே மற்றும் தவறான தொடர்பில் கர்ப்பமடைந்த பெண்கள், சிறுமிகளுக்கும் இந்த கும்பல் திருட்டுத்தனமாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளனர். அதுபோன்ற கருக்கலைப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த கும்பலிடம் இருந்து நவீன ஸ்கேன் உபகரணம், ஆட்டோ, கார் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட கும்பலை தர்மபுரி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கும்பலுடன் தொடர்பில் உள்ள மேலும் சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகளவில் நடந்து வந்தன. தமிழக அளவில், தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில்தான் அதிக குழந்தைகளும் சேர்க்கப்பட்டன.
இந்நிலையில், படிப்படியாக தர்மபுரியில் பெண் சிசுக்கொலைகள் குறைந்து வந்தன. ஆனால் தற்போது பிடிபட்ட கும்பலை வைத்துப் பார்க்கும்போது, கருவில் உள்ளது பெண் சிசு என்று சட்ட விரோதமாக தெரிந்து கொண்டு, கருவிலேயே அதை கலைத்து வந்திருக்கலாம் என்றும், அதனால்தான் பெண் சிசு கொலைகள் குறைந்தது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.