சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேல் வெளியாகாமல் கிடப்பில் இருக்கும் திரைப்படம் ‘மதகஜராஜா’. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படத்தில் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோர்களுடன் மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆர்யா கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
மதகஜராஜா படத்திற்கு முன்பு தயாரித்திருந்த படங்களை விநியோகம் செய்வதில் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டு படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், இந்த படத்திற்கான சிக்கல்கள் முடிவுக்கு வந்து படம் வெளியாகப்போவதாகத் தகவல் வெளியானது. அதற்கேற்ப இப்படம் கடந்தாண்டே வெளியாகும் என்று திரை வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஜெமினி பிலிம் சர்கியூட் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கல் ரேசில் விலகிய பிறகு தொடர்ந்து ‘காதலிக்க நேரமில்லை’, ‘டென் ஹவர்ஸ்’, ‘படை தலைவன்’, ‘சுமோ’, ‘மெட்ராஸ்காரன்’ உள்ளிட்ட 8 படங்கள் பொங்கல் ரேசில் இணைந்தது. அந்த வரிசையில் தற்போது ஒரு தசாப்தங்களுக்கு பிறகு விஷாலின் ‘மதகஜராஜா’ படமும் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.