தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,24,000 பேர் பயன்பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் 30 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் 56,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சமூக பாதுகாப்பு வளைகாப்புத் திட்டத்தின் கீழ் 96,000 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர். 1.71 லட்சம் மீனவக் குடும்பங்கள் 5,000 ரூபாய் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். ஊரகப் பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 14.32 லட்சம் ஆகும்.
68,800 பேர் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். 14,83,961 பேருக்கு கடந்த ஓராண்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 63,077 காவலர்கள் ஒருநாள் விடுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். 1.85 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ரூபாய் 80 கோடி செலவில் 4,694 கி.மீ. தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம், மாவட்டங்களில் புத்தகச் சந்தைகள் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
காவல் ஆணையம், பொருநை அருங்காட்சியகம், மீண்டும் மஞ்சப்பை இயக்கம் ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஓராண்டில் 70% திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 70% நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். சொன்னதைச் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் கடந்த ஓராண்டில் நிறைவேற்றியிருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாமும் என்பதே திராவிட மாடல்; அதுவே இந்த அரசின் நோக்கம்.
ஆவடியில் நரிக்குறவர் இல்லத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட உணவு காரமாக இருந்தாலும், அதில் அன்பு வெளிப்பட்டது. கறிக்குழம்பு காரமாக இருந்ததால் தான் கரோனா வரவில்லை என நரிக்குறவர் மக்கள் தெரிவித்தனர். சமூக நோய்களில் இருந்து காப்பாற்றும் காரமான அரசு இந்த அரசு. மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதே எனது கவலை.
அரசுப் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும். இந்த திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்படும்; ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் வகையில் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்; மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். தமிழகம் முழுவதும் சுமார் ரூபாய் 150 கோடி செலவில் 'தகைசால்' பள்ளிகள் அமைக்கப்படும்.
அனைத்து நவீன வசதிகளுடன் பள்ளிகள் அமைக்கப்படும்; மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும். மக்களின் இருப்பிடம் அருகே தரமான மருத்துவ வசதிகளை வழங்க 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 234 தொகுதிகளிலும் 'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்' செயல்படுத்தப்படும். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்பட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திட்டம் சமமாக செயல்படுத்தப்படும்." இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.