Skip to main content

மாணவர் கிருபாமோகன் வழக்கு! சென்னை பல்கலை. விளக்கம் அளித்திட உத்தரவு!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

மாணவர் கிருபாமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் படித்துக்கொண்டிருந்தார். அவரது தற்காலிக சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று திடீரென்று கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். அவர், அதே பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே முதுகலை இதழியல் படித்தவர். அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்திலும் செயல்பட்டு வருபவர். சட்ட விரோதமாக அவருக்கு கல்வி மறுக்கப்பட்டதை எதிர்த்து, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளை வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி, மீனாட்சி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த ரிட் மனு இன்று நீதியரசர் ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

chennai university student kirubamohan issue high court order

மாணவர் கிருபாமோகனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாடினார். சென்னை பல்கலைக்கழகத்தின் உத்தரவில், 
1. ஏற்கனவே முதுநிலை படித்தவராக இருந்தால், அவர் எந்தப் பாடத்திலும் தோல்வியடைந்திருக்கக் கூடாது.
2. கல்லூரியின் நடத்தை விதிகளை மீறியிருக்கக் கூடாது.
3. ஏற்கனவே படித்திருந்த துறைத்தலைவரின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்று ஒப்படைக்க வேண்டும்.  

chennai university student kirubamohan issue high court order


என தெரிவிக்கப்பட்டு, இந்த மூன்று விதிகளில் எந்த விதியை கிருபாமோகன் மீறியிருக்கிறார் என்று கல்லூரியின் நீக்க உத்தரவில் கூறப்படவில்லை  என்றும், இவ்வாறு எவ்வித காரணமும் தெரிவிக்காமல் மாணவருக்குக் கல்வியை மறுத்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது, உள்நோக்கமுடையது என்றும், மேற்படி உத்தரவிலேயே மேலதிகாரிகளின் உத்தரவுப்படி என்று தெரிவித்திருப்பதன் மூலம்,  இது மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவும், யாரையோ திருப்திப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்ட உத்தரவு என்றும் வாதிட்டார்.
 

இவ்வழக்கில் சென்னை பல்கலைக்கழகம், தனது விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டுமென்று, செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர் நீதிமன்றம், அன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.




 

சார்ந்த செய்திகள்