தமிழகத்தில் இரண்டாம் அலை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைக்கின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் அதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது. இதனால் ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தேவையைச் சாதகமாக்கி ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்கும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புரசைவாக்கத்தில் மெடிக்கலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை திருடி 36,000 ரூபாய்க்கு விற்ற மருந்தாளுனர் கைது செய்யப்பட்டுள்ளார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தக மேலாளர், ரெம்டெசிவிர் மருந்து இருப்பு குறித்து சரிபார்த்த பொழுது 6 ரெம்டெசிவிர் மருந்துகள் காணாமல் போயிருந்தது. இதுதொடர்பாக அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே மருந்தகத்தில் கடந்த 7 மாதமாக அங்கு மருந்தாளுனராகப் பணியாற்றிய ஜெயசூர்யா என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதுகுறித்த புகாரில் மருந்தாளுனர் ஜெயசூர்யா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் 6 குப்பி ரெம்டெசிவிர் மருந்தை ஒரு குப்பி 6 ஆயிரம் என்ற விலையில் மொத்தம் 36 ஆயிரத்திற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் தாமஸ் என்பவருக்கு விற்றது தெரியவந்தது. சென்னையில் மட்டும் இதுவரை 15 பேர் இதுபோல் ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.