தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஹெல்பர், ஒயர்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட்டன. மேலும், 12 ஆயிரம் காலிப்பணியிடங்களை நியமிப்பதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. மின்வாரியப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு மின்வாரிய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மின்வாரியப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் போகும் அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், உத்தரவைத் திரும்பப் பெறக்கோரியும் மின்வாரிய ஊழியர்கள் இன்று மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பாகக் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். ஈரோட்டில் ஈ.வி.என் சாலையில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில், காலை தொடங்கிய காத்திருப்புப் போராட்டத்திற்கு, தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் திட்டச் செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு., மின்வாரியத் தொழிலாளர் சம்மேளனம், பொறியாளர் சங்கம், ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து தொ.மு.ச திட்டச் செயலாளர் சுந்தர்ராஜன் கூறும்போது, "மின்வாரியப் பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் இப்போராட்டத்தில், லைன்மேன், ஒயர்மேன், ஹெல்பர், பொறியாளர்கள் என முழுமையாக அனைத்துப் பணியாளர்களும் பங்கேற்றுள்ளனர். தனியாரிடம் ஒப்படைத்துள்ளதற்கான அரசாணை ரத்துசெய்யும் வரை போராட்டம் தொடரும். அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டத்தை வேறுவழியில் தீவிரப்படுத்துவோம். பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் போராட்டம் நடைபெறும்." என்றார்.