விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ளது பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில். இந்த கோயிலின் தலைமை பூசாரியாக இருந்து வந்தவர் 90 வயது பூங்காவனம். இவருடைய மனைவி 80 வயது எல்லம்மாள். இவர்களுக்கு செல்வராஜ் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். இவர் திமுகவில் மாநில தீர்மானக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த தம்பதிகள் திருமணம் ஆனதிலிருந்து மிகுந்த ஒற்றுமையுடன் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பூங்காவனத்தின் மனைவி எல்லம்மாளுக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு எல்லம்மாள் உயிரிழந்துள்ளார். மனைவி இறந்ததை பார்த்த பூசாரி பூங்காவனம் மனைவி இறந்த துக்கம் தாங்கமுடியாமல் பூங்காவனமும் இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இறப்பிலும் இணை பிரியாத தம்பதிகள் இறந்த தகவல் அறிந்ததும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக தீர்மானம் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, திமுக ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயகுமார் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.