Skip to main content

சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை விளக்கம்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Chennai Police Explanation for  threat to Chennai schools

சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று திருமழிசையில் உள்ள பிரபல பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

அதே சமயம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினோம். பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை’ என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், “சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு ஒரே மின்னஞ்சல் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்தது. அதன் பேரில் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து சோதனை நடத்தப்பட்டது. அங்கு சந்தேகப்படும் படியாக பொருட்கள் ஏதும் இல்லை. அதனால், அந்த மிரட்டல் அனைத்தும் புரளி. புரளியை கிளப்புவதற்காக அனுப்பப்பட்ட மிரட்டலாகவே தெரிகிறது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. 

மேலும், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் மின்னஞ்சல் முகவரியில் வந்த விவரங்களைத் தெரிவிக்க இயலாது. இந்த மிரட்டல் தொடர்பாக பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மிரட்டல் விடுத்த குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்