நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு 5 மாநில தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் ஏற்பாடுகள் தொடர்பாகவும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாகவும் சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் அக்டோபர் 25 ஆம் தேதி தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து அக்டோபர் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும் 5 மாநில தேர்தலையொட்டி தமிழகத்தில் இருந்து 40 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.