சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை (Chennai International Book Fair 2025) கடந்த 16ஆம் தேதி (16.01.2025) தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதனையடுத்து இன்று (18.01.2025) வரை இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை வெளியிட்டார்.
அதே போன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது, உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருது, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, நவீனத் தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது, பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது, புத்தக ஊக்குவிப்பு விருது, உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சசிதரூர், டி.ஆர். பாலு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி எனப் பலரும் ஆகியோர் கலந்து கொண்டனர்.