Skip to main content

மே தினத்தில் இயங்கிய 57 நிறுவனங்கள் மீது வழக்கு; தொழிலாளர் துறை அதிரடி! 

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Case against 57 companies that operated on May Day; Labor Department action!

 

சேலம் மாவட்டத்தில், மே தினத்தன்று விதிகளை மீறி செயல்பட்ட 57 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

 

மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தவிர, இதர தொழிலகங்கள் அனைத்தும், அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை 
விடப்பட வேண்டும்.  

 

மே தினத்தன்று, விடுமுறை விடப்படாத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம், முன் அனுமதி பெற்றும், சில நிறுவனங்களை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. 

 

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (மே 1, 2023) தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், முருகானந்தம், வாசுகி, ரமணி, இளையராஜா, சிவகுமார், சங்கர் ஆகியோர் தொழிலகங்களில் ஆய்வு செய்தனர். மொத்தம் 99 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. விதிகளை மீறியும், முன் அனுமதி பெறாமலும் இயங்கிய 14 கடைகள், 43 உணவகங்கள் சோதனையின்போது கண்டறியப்பட்டன.  

 

இந்த 57 நிறுவனங்கள் மீது மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம், தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைச் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்