Skip to main content

தொகுதி மறுசீரமைப்பு; ‘தென் மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும்’ - கனிமொழி எம்.பி. பேட்டி!

Published on 03/03/2025 | Edited on 03/03/2025

 

Kanimozhi MP says Southern states will be affected the most due to Constituency realignment

2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க தமிழக அரசு சார்பில் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டைப் பாதிக்காத வகையிலே, தென்மாநிலங்களைப் பாதிக்காத வகையிலே, முக்கியமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாதிக்காத வகையிலே செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுப்பி இருக்கின்றார்.

அதற்காக அனைத்து கட்சி கூட்டத்தையும் அழைத்து இருக்கிறார். வராத சில கட்சிகளிடம், கெளரவம் பார்க்காதீர்கள். இது தமிழ்நாட்டுடைய நலனை மையமாக கொண்ட ஒரு கூட்டம். அதனால் நம் உரிமைகளுக்காக இணைந்து நாம் குரல் கொடுக்க வேண்டும். அதனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக தமிழ்நாட்டு நலனைப் பலி கொடுக்காதீர்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டைப் பாதிக்ககூடாது என்ற முதலமைச்சருடைய கருத்துக்கு  சமீபத்தில் தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா புரோ - ரேடா (PRO RATA) அடிப்படையில் மறுசீரமைப்பு நடக்கும், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையாது என சொல்லி இருந்தார். இது தெளிவை தருவதற்குப் பதிலாகப் பல குழப்பங்களை உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால், இதுவரை எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு படிதான் ஒவ்வொரு முறையும் தொகுதி மறுசீரமைப்பு நடந்துள்ளது.

அதாவது மக்கள்தொகை அடிப்படையில்தான் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வு நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட பிறகு, 1971ஆம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சில மாநிலங்கள் இந்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதை முக்கியமாக எடுத்துக்கொண்டு, அதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். பல மாநிலங்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் சீரிய முறையில் கவனம் செலுத்தவில்லை; அந்த மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது. அப்படிப்பட்ட  சூழலில் மக்கள் தொகையை குறைத்து இருக்கக்கூடிய மாநிலங்கள் பாதிக்கப்பட கூடாது. இந்த இரண்டு விதமான மாநிலங்களுக்கு இடையே சீரான நிலை வரும் வரை, தொகுதி மறுசீரமைப்பு நிறுத்தி வைக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்து சொல்லப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு அந்த இடஒதுக்கீடு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று சொல்லப்பட்டது. அதுபோல், நாடாளுமன்றதிலே பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர்களும் பல முறை மறுசீரமைப்பை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டை பாதிக்கக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறார். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டிற்கு எண்ணிக்கை குறைக்கப்படாது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 என்கிற அதே அளவில் இருந்தாலும், மற்ற மாநிலங்களில், உ.பி. முதலான மாநிலங்களில் மக்கள் தொகை அடிப்படையில் அதிகமான எண்ணிக்கை தரப்பட்டால், அதுவும் நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டின் எம்பிக்களுடைய சதவீதம் 543ல் 7.18 சதவிகிதம் இருக்கிறோம். ஆனால் இப்படி மாறும்போது 5 - 5.7 சதவிகிதமாக மாற வாய்ப்புள்ளது. அதில் நாம் பெரிய அளவில் பாதிக்கப்படுவோம்.

Kanimozhi MP says Southern states will be affected the most due to Constituency realignment

தென் மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும். இதைத்தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். இதற்கு ஒரு தெளிவான பதிலை உள்துறை அமைச்சரோ - ஒன்றிய அரசோ கூறவேண்டும். இது நியாயமான அச்சம். இதில் தெளிவு பெற்றால்தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். தமிழ்நாடு பாதிக்கப்படாமல், தென்மாநிலங்கள் பாதிக்கபடாமல் தொகுதி மறுசீரமைப்பு பற்றி சரிசெய்வதற்கு பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அதற்காகதான் முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை அழைத்து இருக்கிறார்கள். அங்கே பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படும். எது சரியாக எல்லாருக்கும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக இருக்கிறதோ, அதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்.

முதலில் விவாதம் நடக்க வேண்டும். அந்த விவாத்திற்கே சிலர் வர தயங்குகிறார்கள். பாஜகவும் அங்கு வந்து நியாயமா வந்து அவர்களின் கருத்துக்களை சொல்லலாம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை எழுப்பலாம்.  எல்லாருடைய கருத்தையும் கேட்டு, அதற்கான சரியான தீர்வைக் காண வேண்டும் என்பதே  முதலமைச்சருடைய எண்ணம். திமுகவினுடைய நிலைப்பாடு. தமிழ்நாடு, தென்மாநிலங்கள், மக்கள் தொகையைக் குறைத்து உள்ள தொகுதி மாநிலங்கள் மறுசீரமைப்பால் பாதிக்கப்பட கூடாது” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்