Skip to main content

ஊட்டியில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக அயல்நாட்டு மரங்களை வெட்டுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
chennai high court ooty medical college forest

 

 

ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு ஏதுவாக, வனப்பகுதியில் அமைந்துள்ள 1,838 அயல்நாட்டு மரங்களை வெட்டுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 1967- ஆம் ஆண்டு, ஜனவரி 7- ஆம் தேதி, ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக, தமிழக அரசால் மத்திய அரசுக்கு 333.30 ஏக்கர் நிலம் காப்புக் காடுகள் பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கப்பட்டது. பிறகு, ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை எடுக்க, நீலகிரி மாவட்ட ஆட்சியர் மூலம் இந்த ஆண்டு பிப்ரவரி 19- ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

 

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை மருத்துவக் கல்லூரி இல்லாத நிலையில், அதில் 25 ஏக்கர் இடத்தில் ஊட்டி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு விட்டதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

நிலத்தை கையகப்படுத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான பணிகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, அந்த நிலத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என உத்தரவிட்டுள்ளது.

 

இதற்கிடையில், வழக்கறிஞர் ரமேஷ் என்பவர், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டுமானங்களை மருத்துவக் கல்லூரிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது எனவும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மரங்களை வெட்டக்கூடாது என அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் மற்றும் வனத்துறைக்கான சிறப்பு அரசு பிளீடர் விஜய் பிரசாந்த் ஆகியோர், "மருத்துவக் கல்லூரி அமைய உள்ள 25 ஏக்கர் இடத்தில் உள்ள மரங்கள் மட்டுமே வெட்டப்பட உள்ளது. அந்த 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை. அயல்நாட்டு மரங்களே உள்ளன. குறிப்பாக, அதில் உள்ள 1,838 மரங்களில் 90 சதவீதம் தைலமரங்களே (Eucalyptus) உள்ளன. மரங்களை வெட்ட மத்திய வனத்துறையிடமும், தமிழக அரசிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக, சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மரங்களை அரசு நடவுள்ளது" எனத் தெரிவித்தனர். 

 

அரசின் விளக்கத்தைப் பதிவு செய்துகொண்டு, மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், விஞ்ஞான முறையில் மரங்கள் வெட்டப்பட வேண்டும். நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே மரத்தினை ஏலம் விட வேண்டும். மரங்களை வெட்டியது தொடர்பான புகைப்பட விவரங்களோடு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 14- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாளில் குவிந்த கூட்டம்; உதகையில் போக்குவரத்து நெரிசல்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Crowds gathered in one day; Traffic jam in the ooty

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தற்போது இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகையில் நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஒரு வழிச்சாலையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சாலைகள் மாற்றப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. உதகை தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா சாலை, கூடலூர் சாலை, பேருந்து நிலையம் செல்வதற்கான சாலை என அனைத்து சாலைகளிலும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.