சாலையைச் சீரமைப்பதற்காகப் போராடியவர்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சாலையைச் சீரமைக்கோரிப் போராடியவர்கள் மீதான வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று (10/07/2021) நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, "தங்களின் பொதுத் தேவைக்கு போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. தங்கள் கிராமத்திற்கான பொதுச் சாலையைச் சீரமைக்க, செப்பனிடக் கோரியே போராட்டம் நடைபெற்றுள்ளது. கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடந்த போராட்டம் என்பதால் இதை சட்டவிரோதம் எனக் கூற முடியாது. அத்தியாவசியத் தேவைகளுக்காக அமைதியாக நடக்கும் போராட்டத்தைச் சட்டவிரோதமாகக் கருத முடியாது" எனக் கூறி சாலையைச் சீரமைப்பதற்காகப் போராடியவர்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.