சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா(93) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சென்னை அடையாறு மருத்துவமனை தலைவர் சாந்தா, அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (19 ஜன.) காலை காலமானார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாக இல்லத்தில் மருத்துவர் சாந்தாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவர், 1955ஆம் ஆண்டு முதல் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 67 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர். இதில், 20 ஆண்டுகள் அவர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைத் தலைவராக இருந்தார். துவக்கக்காலத்தில் மகப்பேறு மருத்துவராக இருந்த சாந்தா, பின் புற்றுநோய் துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார். டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருடன் புற்றுநோய் மையத்தில் இணைந்து மருத்துவ சேவையாற்றியவர்.
புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ்பெற்றவர் மருத்துவர் சாந்தா. ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷன்’, ‘பத்மவிபூஷன்’ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் புற்றுநோய் மருத்துவமனைக்கே செலவிட்டவர் சாந்தா. தமிழக முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவர். அண்ணா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை அளித்தவர்; பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளிகளைக் குணப்படுத்தியவர். மருத்துவர் சாந்தாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.