தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் புதிதாக மூன்று நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் சுரங்கம் அமைக்கக்கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில் ஒருபோதும் காவிரி டெல்டா பகுதியில் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என உறுதியளித்திருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தொடர்ந்து இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும். இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது. மத்திய அரசு அறிவித்துள்ள 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ளவை. வடசேரி, மைக்கேல்பட்டி மற்றும் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதிகள் தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருவதால் சுரங்கம் அமைக்கும் அறிவிப்பை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் காவிரி டெல்டாவில் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இத்திட்டத்தை கைவிடுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.