![hi](http://image.nakkheeran.in/cdn/farfuture/V9BQD7p2kgqFI6eqVRxWMv-mAH24AuroZV-62mcRU-4/1533347652/sites/default/files/inline-images/high_0.jpg)
மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டம் முழுவதுமாக அமல்படுத்தப்படுவதில்லை. மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வியில் இந்த இட ஒதுக்கீடு தரப்படுவதில்லை எனக் கூறி, நூங்கம்பாக்கத்தைச் சேர்ந்த எல்.கே.வெங்கட் என்ற மாற்றுத் திறனாளி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஜூன் 22ம் தேதி அனுப்பிய மனுவை பரிசீலிக்கும்படி, மத்திய மனிதவள மேம்பாடு துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.
இந்த மனுவுக்கு 3 வாரங்களில் பதில் அளிக்கும்படி, மத்திய மனிதவள மேம்பாடு துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.