விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ தீ வைத்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு, அந்த குடும்பத்திற்கு நிவாரண தொகையை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக கட்சி சார்பில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை அளித்துள்ளார். பின்னர் மாணவி ஜெயஸ்ரீயை கொன்றவர்களை என்கவுண்டர் செய்யவேண்டும். அப்படி செய்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அது ஒரு பாடமாக அமையும் என தெரிவித்திருந்தார்.
அதேபோல் பாஜக தலைவர் முருகனும் நேரில் சென்று மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நிலையில், தற்போது தமிழக பிஜேபி தலைவர் முருகன் மீதும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூட்டமாக சென்றதாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.