தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை, கும்பகோணம், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பேராவூரணி எனப் பல முக்கிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூரைப் பொறுத்தவரை அரசுப் பேருந்துகளை விடத் தனியார் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுகிறது. இந்தச் சூழலில் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், பஸ் ஸ்டாண்டில் இருக்கும் தனியார் பேருந்துகளில் யார் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது, யார் அதிக வேகத்தில் முண்டியடித்துக் கொண்டு செல்வது என அந்தப் பேருந்தின் ஊழியர்கள் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இதனால் பேருந்து ஊழியர்கள் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் புறப்படத் தயாராக இருந்துள்ளது. அப்போது அந்த இரண்டு தனியார் பேருந்துகள் இடையே நேரப் பிரச்சனைக் காரணமாக திடீரென தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு, சாலையில் இறங்கிய ஊழியர்கள் பொதுமக்கள் மத்தியிலும், பயணிகள் மத்தியிலும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் நடு ரோட்டிலேயே தாக்கிக் கொள்ளும் அளவிற்கு இந்தப் பிரச்சனை சென்றுள்ளது.
இதைக் கண்ட சக பயணிகளும், ஊழியர்களும் கைகலப்பிலிருந்த ஊழியர்களைச் சமாதானப்படுத்தினர். அப்போது ஆத்திரம் அடங்காத ஒரு பேருந்து ஊழியர் பஸ்-சை ரிவர்ஸ் எடுத்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பேருந்து மீது வேகமாக மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் இரண்டு பேருந்துகளிலிருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறியது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர் அந்த இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சேதாரமாகியுள்ள இரண்டு பேருந்துகளையும் சீர் செய்ய அதிகளவில் பொருட்செலவு ஆகும் என்பதால் பேருந்து உரிமையாளர்கள் வேதனையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.