
தி.மு.க. நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் பழனிச்சாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கரோனா தடுப்பு விதிகளை மீறியும், தனி மனித விலகலை முறையாகப் பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெறாமல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்தக் கூட்டங்களில் மற்ற கட்சிகள் குறித்து பொதுமக்களிடம் தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. கோவையில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண் தாக்கப்பட்டுள்ளார். அதேபோல், பத்திரிகையாளர்கள் பேட்டியின் போது மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும், திரையரங்குகளின் இருக்கைகளுக்கு 50% மட்டுமே உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், தி.மு.க. நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.