
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக சார்பிலும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அனுமதி பெறாமல் கோவில்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக திமுக எம்.பி. கனிமொழி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் அருகே அனுமதி பெறாமல் திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.