
ஆத்தூர் அருகே, இரு தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற பாஜக நிர்வாகி, எதிர் தரப்பினரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வீரகனூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கலியன். இவருடைய மகன் புகழேந்தி என்கிற ரவிகுமார்(37). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பெயிண்ட் அடிக்கும் பணிகளை கூட்டாக ஒப்பந்தம் எடுத்து செய்து வந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து ரவிகுமாரின் அண்ணன் செல்வகுமார் (44), அவருடைய சித்தப்பா மகன் யுவன் (27) ஆகியோரும் பெயிண்ட் அடிக்கும் பணிகளைச் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சதீஸுக்கு தெரியாமல் ரவிகுமார் தனியாக பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தப் பணிகளைச் செய்து வந்திருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இவர்களிடையே சமரசம் செய்து வைப்பதற்காக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக ஐ.டி., பிரிவு மாவட்டச் செயலாளர் சாமுவேல் (36) என்பவரை ஆக. 27ம் தேதி இரவு, வீரகனூர் - பெரம்பலூர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே வரவழைத்துள்ளனர். பேச்சுவார்த்தையின் போது சாமுவேலுக்கும், ரவிகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரவிகுமார் அவரைக் கல்லால் தாக்கியுள்ளார். ஆத்திரம் அடைந்த சாமுவேல் தான் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளால் ரவிகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரவிகுமார் கத்திக் கூச்சல் போட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு, அவருடைய அண்ணன் செல்வகுமார், சித்தப்பா மகன் யுவன் ஆகியோர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது அவர்களையும் சாமுவேல் அரிவாளால் வெட்டியுள்ளார். பொதுமக்கள் அங்கு கூடிவிட்டதால் சாமுவேல் தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த மூவரையும் பொதுமக்கள் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் சாமுவேலின் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ரவிகுமார் அளித்த புகாரின் பேரில், சாமுவேல் மீது வீரகனூர் காவல்நிலைய காவல்துறையினர் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சாமுவேல் அளித்த புகாரின் பேரில் ரவிகுமார், செல்வகுமார், யுவன், குமார் ஆகியோர் மீது மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஆத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.