குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்துக்கள் பெறப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று (02/02/2020) தமிழகம் முழுவதும் தி.மு.க.வின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திலும் நடைபெற்றது.
தூத்துக்குடி சிதம்பர நகர் 02ம் தெருவிலும், ஏரல் நகரின் காந்தி சிலையின் முன்பாகவும், தி.மு.க.வின் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் கனிமொழி கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஏற்ப இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இந்தச் சட்டதை எதிர்த்து பொது மக்கள், பொது நல அமைப்பினர், மாணவர்கள் தன்னெழுச்சியாகவே போராடி வருகின்றனர். அவர்களை எதிர்க்கட்சிகள், யாரும் தூண்டி விடவில்லை பா.ஜ.க.வின் அங்கமான ஆர்.எஸ்.எஸ்.சின். கருத்துக்களை எடுத்துச் சொல்லும் மாணவர்கள் சுடப்படுகிறார்கள் இவர்கள் தேசத்துரோகிகள் என்று சுட்டவர் பதிவிடுகிறார். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்களை சுடவேண்டும் என்று மத்திய அமைச்சர் ஒருவரும் சொல்லுகிறார்." என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கீதாஜீவன் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் உடனிருந்தனர்.