தமிழக அரசின் உத்தரவையடுத்து திருச்சியிலிருந்து மதுரை, திருநெல்வேலி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் புறப்பட்டன. காய்கறி மற்றும் மளிகை வியாபாரங்கள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை சில தளர்கவுளுடன் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. ஆனால் கரோனா தொற்று வேகமெடுப்பதால் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மேலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்களது ஊர்களுக்குச் செல்லும் வகையில் நேற்றும், இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நேற்றும், இன்றும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து மளிகை கடைகளும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இன்று பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பை தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பணியில் உள்ளவர்கள் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். திருச்சி மாவட்டத்தில் பணியில் உள்ளவர்கள் தங்கள் மாவட்டத்திற்கு பேருந்து மூலம் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தற்போது சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை, நாகூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன. தற்போது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 50 பேருந்துகள் பல்வேறு மாவட்டத்திற்கும், மேலும் உள்ளூர் பேருந்துகள் 25 இயக்கப்பட்டு வருகிறது. பேக்கரி மற்றும் மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் சமூக இடைவெளியை மறந்து பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். முடிதிருத்தும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல மருந்து கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டபடி வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.