தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் கூட்டு எதிர்ப்பு திறன் எவ்வளவு உருவாகி இருக்கிறது என்பதைக் கண்டறிய மூன்றாம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு, அந்த முடிவுகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 26,610 மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில் 17,624 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்தது. 26,610 மாதிரிகளில் 888 திரள்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும் அடங்கும்.
ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டில் 66.2% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84%, குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37% நோய் எதிர்ப்புத் திறன் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 31% ஆக இருந்த நோய் எதிர்ப்பு திறன், கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இரண்டாம் கட்ட ஆய்வில் 29% ஆக குறைந்திருந்தது.
முதற்கட்ட ஆய்வில் 49% நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தில், இரண்டாம் கட்ட ஆய்வில் 28% ஆக குறைந்து தற்போது 58% ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் முதலில் 34% ஆக இருந்து 49% ஆக அதிகரித்து தற்போது 67% ஆக மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 41%- ல் இருந்து 49% ஆகி, தற்போது 82% ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்ட ஆய்வில் 40% ஆக இருந்து, இரண்டாம் கட்டத்தில் 22% ஆக குறைந்து தற்போது 84% ஆக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. கரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது 97,60,000 பேர் தடுப்பூசி செலுத்தி முடித்திருந்தபோது ஆய்வு நடத்தப்பட்டது. மேற்கு மாவட்டங்களான ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டு நோய் எதிர்ப்புத் திறன் 45% என்ற அளவிலேயே இருப்பதால் அங்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.