Skip to main content

பக்கிங்காம் கால்வாய் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே இருக்கும்... உயர் நீதிமன்றம் வேதனை! 

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

The Buckingham Canal will be only History Book says High Court

 

பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்றுப் புத்தகத்தில் மட்டுமே கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்கும் என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

 

கிராமங்களில் இருக்கும் குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சுதர்சனம் தாக்கல் செய்த மனுவில், நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாதது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் மாதவரம் கிராமத்தில் உள்ள 1.17 ஹெக்டேர் பரப்பிலான  ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அதனைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சிக்கு மனுதாரர் புதிதாக மனு அளிக்கவும், அந்த மனுவின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

 

பின்னர் சென்னையில் மொத்தம் எத்தனை நீர்நிலைகள் உள்ளன? என மாநகராட்சி தரப்புக்குத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், நீர்நிலைகளை அடையாளம் காண திட்டம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

அதன் பிறகு பக்கிங்காம் கால்வாயை ஏன் சீர்படுத்தவில்லை என்றும், அது அருமையான கால்வாய், நீர்வழி போக்குவரத்திற்கான கால்வாய் என்றும், இதனை முறையாக சீர்படுத்தவில்லை என்றால், வரலாற்றுப் புத்தகத்தில் கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டும்தான் இருக்கும் என வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்