
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சன்னாசி (வயது 45). இவருக்கு விஜயா(31) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சன்னாசி மனைவி விஜயாவுக்கும், சன்னாசி தம்பி கருப்பையாவிற்கும் (40) கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த சன்னாசிக்கும், அவரது மனைவி விஜயாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இருவரையும் எச்சரித்துள்ளார். தம்பி கருப்பையாவை தனது வீட்டுக்கு வரக்கூடாது என்று சன்னாசி எச்சரித்து அனுப்பினார். இதனால் கருப்பையா தனது குடும்பத்தினருடன் தாலம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 23-ந்தேதி விஜயா தனது கொழுந்தன் கருப்பையாவிடம் பேசியுள்ளார். அப்போது இருவரும் சன்னாசியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 24ந்தேதி இரவு சன்னாசி தனது பைக்கில் சித்தூரில் உள்ள ஒரு பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த கருப்பையா அவரை பின்தொடர்ந்துள்ளார். திடீரென பைக்கை வழிமறித்த கருப்பையா, தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் சன்னாசியை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் சன்னாசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சன்னாசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயா மற்றும் கருப்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.