கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசியை அடுத்த குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). இவர் நேற்று காலை சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்த படி சென்ற அவர், செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய படி சென்றார். அப்போது செல்போன் திடீரென்று வெடித்தது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். செல்போன் வெடித்தத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சூளகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிக வெப்பம் காரணமாகவே செல்போன் வெடித்தாக தகவல் வெளியாகியுள்ளது. இரு சக்கர வாகனங்கள் அல்லது கார் போன்ற வாகனங்களை இயக்கும் போது, ஓட்டுனர்கள் செல்போனை தவிர்க்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை இயற்றினாலும், ஓவ்வொரு வரும் அதை பின்பற்றினால் மட்டுமே, இது போன்ற சம்பவங்களை குறைக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.