புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒருவர்12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த போது மாணவிக்கு திடீர் வயிற்றுவலி எனத் துடித்துள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் மாணவியை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவமனை செல்லும் வழியிலேயே மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்சிலேயே மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன் பிறகு மாணவி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், ‘எங்கள் ஊரைச் சேர்ந்த திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையான ந. சிலம்பரசன் என்பவர் சுயஉதவிக்குழு வசூலுக்கு தன் வீட்டிற்கு வரும் போது ஆள் இல்லாத நேரத்தில் என்னை மிரட்டி இணங்க வைத்துவிட்டார். இந்த குழந்தைக்கு அவரே காரணம்’ என்று கூறியுள்ளார்.
மாணவியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலிசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்திற்குக் காரணமான சிலம்பரசனை தேடி வருகின்றனர். பள்ளி மாணவி கர்ப்பமாகி குழந்தை பிறந்தது அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறுமி கர்ப்பமாக இருந்தது பெற்றோருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் எப்படித் தெரியாமல் இருந்தது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இது போலச் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி மோசம் செய்யும் இது போன்ற நபர்களுக்குச் சரியான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.