
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அலுமினிய பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக ரேவதி பாலமுருகனை விட்டுப் பிரிந்து வாழ்ந்துள்ளார். பாலமுருகன் பலமுறை அழைத்தும் ரேவதி அவருடன் சேர்ந்து வாழ வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மது போதையில் காவல் நிலையம் வந்த பாலமுருகன், அங்கிருந்த காவலர்களிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கச் சொல்லி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் பாலமுருகன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்துத் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு உள்ளார்.
இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் மஞ்சுளா, பாலமுருகனின் கையில் இருந்த கத்தியைப் பிடுங்க முயன்றுள்ளார். பாலமுருகன் கத்தியைக் கொடுக்க மறுத்து, கத்தியைப் பிடுங்கியபோது, பெண் காவலர் மஞ்சுளா கையில் பல இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரும் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பவுலோஸ், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா, காயமடைந்த பெண் காவலர் மஞ்சுளாவைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.