பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை விசாரணைகள் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இறுதி கட்டத்தை எட்டும் அளவிற்கு தீவிரமடைந்து வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு கூடுதல் தகவலாக படுகொலைக்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு கைமாற்றப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் பசுபதி ராமன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 'ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு கைமாற்றப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு சதிச் செயல்கள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளையும் அந்த வழக்கங்களுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்' என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேநேரம் மனுதாரர் தரப்பில் 'ஒவ்வொரு முறையும் இதுபோன்று விசாரிக்க வரும்போது இதே காரணத்தைக் கூறி விசாரணையை தாமதப்படுத்துகின்றனர்' எனக் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்த அனைத்து மனுகளுக்கும் பதில்மனு தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டுவரப்பட்டு கைமாற்றப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தலை கொடுத்துள்ளனர்.