Skip to main content

கும்பகோணம் கோயிலில் தீ; வருத்தத்தில் பக்தர்கள்

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
kumbakonam

 

கும்பகோணம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்  திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோயில் கருவறையில் இருந்த வஸ்திரங்கள், பூஜை பொருட்கள், பீரோ ஆகியவை எரிந்து நாசமடைந்தது.
கும்பகோணம் அருகே சத்திரம்கருப்பூர் மெயின் ரோட்டில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பனந்தாள் காசி மடத்துக்கு சொந்தமான கோயிலாகும்.

 

இந்தநிலையில் கார்த்திகை நட்சத்திரம் என்பதால் கோயில் சிவாச்சாரியார் சுந்தரேசன், மூலவர் சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்பாளுக்கும் அபிஷேகங்கள் செய்து, அலங்காரம் செய்தார். பின்னர் கருவறை சன்னதியில் விளக்கேற்றி வைத்து விட்டு 12 மணியளவில் தீபம் ஏற்றி வைத்து விட்டு சென்றார்.

 

இதற்கிடையில் மதியம் 12.30 மணியளவில் கோயிலிலிருந்து திடீரென குபுகுபுவென புகை வெளியேறியதோடு துணிகள் எரிந்து கருகும் வாடை வீசியது, இதனையடுத்து கோயிலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் உடனடியாக கோயில் சிவாச்சாரியருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

 

கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

 

கோயில் கதவை திறந்து பார்த்த போது, கோயில் கருவறையில் இருந்த பூஜை பொருட்கள், பீரோவில் இருந்த சுவாமி, அம்பாளுக்கு சாத்தப்படும் 50 சேலைகள், 30 வேட்டிகள், எலக்ட்ராணிக் மங்கள வாத்தியம் உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மேலும் அர்த்த மண்டபத்தில் இருந்த பூஜை பொருட்களும் எரிந்தது.

 

இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் கோயிலுக்கு வந்து தீப்பிடித்து எரிந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தனர். மேலும் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கோயில் கணக்கர் மஞ்சமுனி கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் தமிழகத்தில் சமீப காலமாக மதுரை மீனாட்சி அம்மன்கோயில், வேலூர், திருவாலங்காடு, திருவாரூர், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து, கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று நிகழ்ந்த தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

சார்ந்த செய்திகள்