தேனி மாவட்டத்திலுள்ள போடியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா காரணமாக அனுமதிக்கப்பட்ட 43 பேரின் 53 வயது பெண் ஏப்ரலில் பலியானார். மீதியுள்ள 42 பேரும் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் போடி வடக்கு ராஜ வீதியில் வசித்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு எதிரே இட்லி கடை நடத்தி வரும் 50 வயது மதிக்கதக்க பெண்ணுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளார். இவர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்குச் சென்று சமையல் செய்து கொடுத்தது சுகாதாரத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவருடன் தொடர்புள்ள 106 பேர்களின் சளி, எச்சில் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய தங்கை பெரியகுளத்தில் இருந்து போடி சென்றுள்ளார். அவரின் தொடர்பில் உள்ளவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் வரை கரோனா இல்லாத மாவட்டமாக இருந்த தேனியில் மீண்டும் கரோனா தொற்று உருவானதால் தேனி மாவட்ட மக்கள் நிம்மதி இழந்து வருகிறார்கள்.