இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டு படகு மீனவர்கள் இன்று மீன் பிடி செல்வதை நிறுத்தியுள்ளனர்.

இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த தீவிரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தும் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலில் மீன் பிடிக்கச் செல்ல மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுத்தப்பட்ட படகுகளில் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவிர பெரியதாழை முதல் வேம்பார் வரையிலான ஆயிரக்கணக்கான படகுகள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் கரைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் நாட்டுப் படகுகளின் சங்ககள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே சதிச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவிவிடாமலிருப்பதைக் கண்காணிப்பதற்கான கடற்படையின் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரக் காவல்படை மற்றும் மரைன் போலீசாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.