





மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டியதோடு பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடி, கற்களை தூக்கி வீசி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மன்னம்பந்தல் வழியாக தருமை ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை புரிந்தார். அப்போது மன்னம்பந்தல் பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்களை தடுப்புகள் கொண்டு தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிரான வாசகங்கள் பதிக்கப்பட்ட பதாகைகளை பிடித்து கோஷங்களை எழுப்பினர். ஆளுநர் மன்னம்பந்தல் பகுதியை கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். தொடர்ந்து ஆளுநர் பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எறிந்து பதாதைகளை சாலையில் தூக்கி வீசியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பின்னர் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் அப்பகுதியில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.