ஒரு கருத்தை சொல்வதற்கும் கூட குறைந்தபட்ச தகுதி வேண்டாங்களா? கொடுமை கொடுமைனு கொடுமை செய்பவனே சொன்னானாம் அப்படித்தான் இதுவும் இருக்கு என இந்த செய்தி மூலம் தெரிய வருகிறது என்றார் அரசு ஊழியர் ஒருவர். அந்த செய்தி இதுதான்.
மனிதர்கள் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் இன்று நடைபெற்றது. தமிழகம் முழுக்க டாஸ்மாக் சாராய கடைகளை அமைத்து மக்களை குடிக்க வைக்கும் தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பாகத்தான் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி தான் அது.
இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோ, தாசில்தார் பரிமளா, கலால் துறை தாசில்தார் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர். அதில், "குடிக்காதே குடிக்காதே கள்ளச்சாராயம் குடிக்காதே.., ஆடையில்லா மனிதன் அரை மனிதன்... போதையில்லா மனிதன் முழு மனிதன்..." என்ற முழக்கங்களை முன் வைத்தனர்.
இப்பேரணி காந்திஜி ரோடு மார்கெட் அருகில் தொடங்கி ஸ்டேட் கச்சேரி ரோடு வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணி குறித்து பேசிய தாலுக அலுவலக ஊழியர் ஒருவர், "அரசு பல கோடி ரூபாயை மதுவின் தீமைகள் என விழிப்புணர்வுக்காக செலவிட்டுள்ளது என்கிற கணக்கு காட்ட சாராயம் விற்பவர்களே சாராயம் குடிக்காதே என போலி நாடகம் ஆடுவது தான் இது" என்றார்