பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக நிர்வாகி ஒருவர் தனக்குத்தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் பாஜகவின் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாஜக உள்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டு எழுந்தது.
பாஜக நிர்வாகி கோகுலகிருஷ்ணன் கட்சியின் முறையற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அங்குள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் முன்பாக சாட்டையால் தன்னைத்தானே ஆறு முறை அடித்துக்கொண்டு தனது எதிர்ப்பினை கட்சி தலைமைக்கு தெரிவித்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம்சாட்டிய பாஜக மாநில தலைவர் திமுக அரசை அகற்றும் வரை தான் காலில் காலணிகள் அணியப் போவதில்லை என சபதம் எடுத்ததோடு தன்னைத்தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். தற்போது பாலியல் குற்றவாளிகளுக்கு பாஜகவில் பதவி அளிக்கப்படுவதாக அவரது கட்சி நிர்வாகி ஒருவரே தன்னை சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்ட பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.