Skip to main content

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி... அமித்ஷாவுடன் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் சந்திப்பு!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

 BJP-AIADMK alliance ... OPS-EPS meeting with Amit Shah!

 

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்பொழுது (21/11/2021) சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் அரசு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், அ.தி.மு.க அரசு தொடர்ந்து மக்களுக்கான சேவைகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது. ஆனால் இந்தச் சாதனைகளை எல்லாம் தமிழக மக்கள் பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள், அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினரும் இதைப் பார்க்கிறார்கள் ஆனால் பரிதவிக்கிறார்கள். அ.தி.மு.கவிற்கு மக்கள் செல்வாக்குத் தினம் தினம் கூடுகிறது எனப் பதைபதைக்கிறார்கள். அதனால், மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறார்கள், குறைசொல்கிறார்கள். ஆனாலும் மூன்றாவது முறையாக நாங்கள் வெற்றிக்கனியைப் பறிப்போம். தேசிய அளவில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பிரதமர் மோடி ஆற்றலுடன் செயல்பட்டு வளர்க்கிறார். இனி வரும் தேர்தலிலும் பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணி தொடரும் என்பதை இந்தக் கூட்டத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  அதனையடுத்து பேசிய முதல்வரும் பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

 

 BJP-AIADMK alliance ... OPS-EPS meeting with Amit Shah!


மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், நான் இங்கு சென்னைக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், 10 ஆண்டுகள் நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்கள், நீங்கள் இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறீர்கள், எனப் பட்டியலிடுங்கள். எங்கள் தரப்பில் நான் மிகவும் பணிவோடு நாற்சந்தியில் நின்றுகொண்டு பட்டியல் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? பல நாட்களுக்குப் பிறகு சென்னை வந்திருக்கிறேன் எனவே அரசியல் பேசவும் விரும்புகிறேன். வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வருகிறது. தமிழகத்திலும் அதைச் செய்வோம். ஊழலைப் பற்றிப் பேசத் திமுகவிற்கு என்ன அருகதை இருக்கிறது என்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமித்ஷா மீண்டும் லீலா பேலஸ் ஹோட்டலுக்குப் புறப்பட்ட நிலையில், அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நடக்கும் இந்தச் சந்திப்பில், அமைச்சர் ஜெயக்குமார், தேனி எம்.பி.ரவீந்திரநாத் ஆகியோர் பங்குபெற்றுள்ளனர். அதேபோல், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 3 கடிதங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் வழங்கினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்