Skip to main content

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! 

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
+12 General Exam Results Released!

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.80 லட்சம் பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர். இதனையடுத்து சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. இத்தகைய சூழலில் இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% ஆகும். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம் ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.49 சதவீதம் ஆகும். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 ஆகும். இருபாலர் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 94.70 சதவீதம் ஆகும். 397 அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம்  வகுப்பு பொதுத் தேர்வில் 2478 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த கல்வி ஆண்டில் 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி 94.56% விகிதம் அதிகரித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்