![Tirupattur](http://image.nakkheeran.in/cdn/farfuture/vvx14manyZdQ5I9eIPyirmcUnykeZ-hq-QblnkQZfFk/1595309455/sites/default/files/inline-images/605_39.jpg)
இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த போலீசைக் கண்டித்து தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியானார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி 27 வயதான முகிலன். திருமணமாகி குழந்தை உள்ளது. கடந்த 12ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் முகிலன் குழந்தைக்கு மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் முகிலன் வந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் தனக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகவும், வேலைக்குச் சென்றால் மட்டுமே சாப்பிட வழி என்றும் இருசக்கர வாகனத்தைத் திருப்பித் தர போலீசாரிடம் வலியுறுத்தினார்.
ஆனால் போலீசார் வாகனத்தைத் திருப்பி தராமல் அருகில் உள்ள தனியார்ப் பள்ளி மைதானத்தில் நிறுத்தி வழக்குப் பதிவு செய்வதாகக் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த முகிலன் வீட்டிற்குச் சென்று மண்ணெண்ணை எடுத்துக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் முன்னிலையில் தீக் குளித்தார்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியாகி தீயை அணைத்து முகிலனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே அவர் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜீலை 21 ஆம் தேதி விடியற்காலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால் ஆம்பூர் நகரம் முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.