கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ஆசிரமத்தை இடித்து விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் பாஸ்கரானந்தா. பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், நான் தான் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகச் சிலைகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் வெளிநாடுகளில் அவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது. காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் கோவை பாஸ்கரானந்தா சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர்.
3 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட இந்த சோதனையில் 200 கிலோவிற்கும் அதிகமான எடையுடன் 4 அடி உயரம் கொண்ட ஐம்பொன் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலை வைத்திருப்பதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் காவல்துறையினர் அதனைக் கைப்பற்றிச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலையை ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப் பிரியா சிலையின் தொன்மையினை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் அந்தச் சிலை ஒப்படைக்கப்பட்டது.