Skip to main content

பாரதியார் நூற்றாண்டு நினைவு: ஆய்வாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த முதலமைச்சர்!  

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Bharathiyar Centenary Commemoration: Chief Minister presents award to researchers!
பாரதி நினைவு நூற்றாண்டு விருது பெறுவோர்

 

மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அன்று “மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன். தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன். பேரா.முனைவர் ய.மணிகண்டனுக்கும் தலா மூன்று இலட்சம் ரூபாயும், விருதும், பாராட்டு சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்” என்று அறிவித்தார்.

 

அவ்வறிவிப்பின்படி தமிழ்நாடு முதலமைச்சர், இன்று (10.12.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன் மற்றும் பேராசிரியர் முனைவர் ய.மணிகண்டன் ஆகியோருக்கு 'பாரதி நினைவு நூற்றாண்டு விருது' மற்றும் விருதுத்தொகை தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை வழங்கினார்.

 

மேலும், மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன் ரா.அ.பத்மநாபன். தொ.மு.சி.ரகுநாதன். இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்களது குடும்பத்தாருக்கு 'பாரதி நினைவு நூற்றாண்டு விருது' மற்றும் விருதுத்தொகை தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார்.

 

Bharathiyar Centenary Commemoration: Chief Minister presents award to researchers!
நவிமும்பை தமிழ்ச் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதியுதவி

 

அதனைத் தொடர்ந்து, நவிமும்பை தமிழ்ச் சங்கத்திற்கு கட்டடம் கட்ட தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் முதலமைச்சர் வழங்கினார்.

 

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில் “திருக்குறள் முற்றோதல் செய்து குறள் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு பரிசுத்தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்ச வரம்பு நீக்கப்பட்டு பரிசுத்தொகை உயர்த்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. அவ்வறிவிப்பின்படி திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த மாணவச் செல்வங்கள் 219 பேருக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் குறள் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டது.

 

Bharathiyar Centenary Commemoration: Chief Minister presents award to researchers!
பாராட்டுச் சான்றிதழ் பெறும் மாணவச் செல்வங்கள்

 

கரோனா காரணமாக பரிசு பெறுவோர் அனைவரையும் சென்னைக்கு வரவழைப்பதை தவிர்க்கும் பொருட்டு, இந்த 219 பேரில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் குறள் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் முதலமைச்சர் வழங்கினார்.

 

இந்த நிகழ்வின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் (பொறுப்பு) செ. சரவணன், ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்