குழந்தைகள் பிச்சை எடுப்பதற்கு பின்னால் ஒரு பெரிய மாபியா கும்பல் இயங்கி வருவதாகவும் அதை மத்திய அரசும், மாநில அரசுகளும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் லதா ரஜினிகாந்தின் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில்,
சாலையில் குழந்தைகள் பிச்சை எடுக்கிறார்கள். ஆனால் அந்த சாலையில் இருக்கும் காவலர்கள் அவர்கள் அருகில்தான் இருக்கிறார்கள் அப்படி பிச்சை எடுக்கும் குழந்தைகளை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைத்து உங்களை யார் பிச்சை எடுக்க வைத்தது. உங்கள் பின்னால் யார் இருக்கிறார்கள். உங்களை யார் இயக்குகிறார்கள் என என்குயரி பண்ணுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும், எவ்வளவு காலம் ஆகும்.
பெரிய ஒரு சைல்ட்டு மாஃபியாவே இங்கே இருக்கு. அதை பற்றி யாரும் கவனிப்பதில்லை, அரசாங்கம் கவனிப்பதில்லை, காவல்துறையும் கவனிப்பதில்லை, ஏன் சமூகம் கூட அதை கவனிக்காமல் கடந்து தான் சொல்கிறது. அவர்கள் பின்னாடி ஒரு பெரிய மாஃபியாவே இருக்கு. குழந்தைகளைக் கடத்திக் கொண்டுசென்று அவர்களுடைய முகவரியை அழித்து, அவங்க தாய்தந்தை எல்லாத்தையும் அழித்து, அனாதையாக்கி அவர்களை பிச்சைக்காரர்களாக்கி, குற்றவாளிகளாக்கி, நோயாளிகளாக்கி விடுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட குழந்தைகளுக்காக மத்திய மாநில அரசுகள் 2 சதவீதம் கூட நிதி ஒதுக்கவில்லை எனக் கூறினார்.