சுவையான தேனை வழங்கும் தேனீ கூட்டம் கலைந்தால் அவைகள் விர்ரென பறந்து வந்து கொட்டும். ஆனால் உயிரையே குடிக்குமா? அப்படித்தான் அந்த பரிதாப சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால்கரையில் வெற்றி நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு நூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் இந்த வீதியின் முடிவில் நடுமேடு என்ற பகுதி உள்ளது. அங்கு ஒரு பெரிய மரம் அதன் கீழே கருப்பணசாமி கோயில் இப்பகுதியைச்சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மாலை நடுமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.
அங்கே சாமியைக் கும்பிட்டு பொங்கல் வைக்க தொடங்கினார்கள். பொங்கல் வைக்கும் அருகே இருந்த மரத்தில் தான் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்நிலையில் பொங்கல் வைக்கும் போது ஏற்பட்ட புகை மூட்டம் மரத்தில் பரவியது. இதன் காரணமாக மரத்திலிருந்த தேனீக்கள் கலைந்து பொங்கல் வைத்த அந்த கும்பலை விரட்டி விரட்டி கொட்டியது.
இதில் பிரியா, ராஜபூபதி, லட்சுமணன், பாலாஜி, குழந்தைஅம்மாள் மற்றும் இரண்டரை வயது குழந்தை என 12 பேர் தேனீக்கள் கடியால் காயமடைந்து சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை அம்மாள் பரிதாபமாக இறந்தார். தங்கள் கூட்டை கலைத்தவர்கள் மீது தேனீக்களின் ஆவேச தாக்குதல் ஒரு உயிரே பலியாகியுள்ளது. காயமடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.