திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் அதிமுகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, மேல வீதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சிலைகள் உள்ளன. இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவஞ்சலி என்ற நிலையில், எடப்பாடி ஆதரவாளர்கள் மாலை அணிவிக்க வந்தனர். இதற்காக எடப்பாடி அணி சார்பில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அங்கு வந்த ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் பேனரை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால், போலீசார் அதனை அகற்ற அனுமதி மறுத்தனர். இதனால் வாக்குவாதம் உருவானது.
அதனைத் தொடர்ந்து போலீசார் தார்ப்பாய் மூலம் அந்த பேனரை மூடச் சென்றனர். ஆனால், அதனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோதலாக உருவெடுத்தது. இதனால் அந்தப் பகுதியே பரபரப்பில் மூழ்கியது. நேற்று இதேபோல் புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜெ. சிலையை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நிறுவ முயன்ற நிலையில் போலீசார் அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.