புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு திருவிழா கரறம்பக்குடி ரத்தின மண்டபத்தில் இன்று நடந்தது. காலை 10 மணிக்கு விழா நடத்துவதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பொறுப்பாளர் ராணி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். விழாவில் 281 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது பத்து மணிக்கு வரவேண்டிய கந்தர்வகோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உச்சி வெயில் நேரத்தில் 12 மணிக்கு வந்து சேர்ந்தார்.

தாமதம் ஏற்பட்டதால் விழாவில் பங்கேற்ற பலருக்கும் பேச வாய்ப்பு அளிக்க முடியவில்லை அதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகத்தை மட்டும் பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அப்போது பாப்பாபட்டி அதிமுக ஊராட்சி செயலாளர் முருகேசன் எழுந்து வேறு சிலரையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று சொன்னபோது அருகில் நின்ற சாகுல் என்ற அதிமுக தொண்டர் ஒன்றிய செயலாளரையே பேச அனுமதிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே முருகேசனிடம் செல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சாகுல் - முருகேசன் மூக்கில் குத்தி விட ரத்தம் கொட்டியது.

இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதனால் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு திருவிழா மேலும் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் 10 நிமிடங்கள் வரை அதிமுகவினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விழா மீண்டும் தொடங்கியது. இந்த சம்பவத்தால் கல்யாண மண்டபம் பரபரப்பில் இருந்தது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று வெளியில் வந்து சொல்லிவிட்டு சென்றுள்ளார்.