கி.பி 15- ஆம் நூற்றாண்டில் திருவெங்கட்டர்- முத்தமையின் தம்பதியரின் மகனாக பிறந்தார் அருணகிரிநாதர். செல்லமாக தன் சகோதரியால் வளர்க்கப்பட்டவர், இளம் வயதில் பெண் பித்தராக இருந்துள்ளார், திருமணம் செய்த மனைவி இருக்கும்போதே இன்னும் பல பெண்களை தேடி, நாடி சென்றுள்ளார். ஒருக்கட்டத்தில் அவர் விரும்பிய பெண்கள் ஒதுக்கி, கட்டிய மனைவியும் ஒதுக்க தன் சகோதரியையே தவறாக நினைக்க, அதில் மனம் வெதும்பி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொள்ள குதித்ததாகவும், அப்போது அருணகிரிநாதரை கீழே விழுந்து இறக்காமல் காப்பாற்றினார் கடவுள் முருகன் என்கிறது வரலாறு.
அதன்பின் அவர் முருகபெருமானை நாயகனாக வைத்து பல நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி, பாடியுள்ளார். தமிழகத்தில் அறுபடை வீடுகளிலும் இவரது பாடல் ஒளிக்கிறது. வாய் மணக்க திருப்புகழ் பாடுவோம் எனச்சொல்லப்படும் திருப்புகழ் என்கிற நூலை எழுதியதும் அருணகிரிநாதர். இவரது ஊர், பிறப்பு, வளர்ப்பு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் அவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என ஒப்புக்கொள்கின்றனர். தமிழகம், இலங்கையில் அருணகிரிநாதருக்கு விழா எடுத்தாலும், அவர் பிறந்த ஊராக ஒப்புக்கொண்ட திருவண்ணாமலையில் அவருக்கென ஒரு மணிமண்டபம் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் இருந்தது.
இந்நிலையில், அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை என்கிற தனி அமைப்பு ஒன்று அருணகிரிநாதர்க்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளிடம் நிதி திரட்டியுள்ளது. அதோடு, தமிழகரசின் இந்து சமய அறநிலையத்துறையினரிடமும் அனுமதி பெற்றுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா செப்டம்பர் 8ந்தேதி திருவண்ணாமலை நகரில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், அதிமுக பிரமுர்களுடன் வந்து அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அதிமுகவினர் அந்த இடத்தில் இருந்து சென்ற நேரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வந்து அடிக்கல் நாட்டப்படும் இடத்தில் செங்கல் எடுத்து வைத்து வணங்கினார். அவர் சென்ற சிறிது நேரத்தில் திருவண்ணாமலை தொகுதி எம்.பியும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளருமான அண்ணாதுரை, அதே இடத்திற்கு வந்து அவர் ஒரு செங்கல் எடுத்து வைத்தார். ஒரு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் கூட அரசியல் பார்த்து தனித்தனியாக வந்து செங்கல் எடுத்து தந்து அடிக்கல் நாட்டியது கேலிக்குறியதாக பார்க்கப்படுகிறது. அதிலும் திமுக மா.செ வேலு தனியாகவும், எம்.பி தனியாகவும் வந்தது கேள்வியை எழுப்பியுள்ளது.