புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகளை செய்து கொடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் என சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷணன் தெரிவித்துள்ளார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள், செல்போன் மூலம் வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாக மத்திய உளவுத்துறை அலர்ட் செய்ததையடுத்து சிறைத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் புழல் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முகமது முதாகிர், முகமது ரிகாஷ், முகமது ரபீக் ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை கைப்பற்றினர்.
அந்த செல்போனில் பதிவான படங்களில் சிறைச்சாலையில் விதிமுறைகளை மீறி விதவிதமான உணவுகள், ஒரு அறையில் கம்ப்யூட்டர் சிபியூ என அதிர்ச்சியடையும் வகையில் இருந்துள்ளது. இது செய்தி ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் வருகை தந்திருந்த சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’சென்னை புழல் சிறையில் அனுமதிக்கப்பட்ட வசிதிகளுக்கு மேலாக சொகுசான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பத்தரிகையில் செய்திகள் வந்துள்ளது. கடந்த காலங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்திருக்கிறது.
தற்போது இது போன்ற வசதிகளின் காரணமாக சிறையிலிருந்து கொண்டே வெளியில் குற்றச்சம்பவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற தகவல்களும் உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டிறிந்து உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என மார்க்ஸிசிட் கட்சி கேட்டுக்கொள்கிறது’ என்றார்.