அறியலூர் மாவட்டம் செந்துரை அருகேயுள்ளது ஈச்சங்காடு கிராமம். இங்கு புகழ் பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோயில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த2010 ம் ஆண்டு தேர்திருவிழாவின் போது தேரின் அச்சு முறிந்து போனது. அதன் பிறகு அதை சீர் செய்து தரும் படி அறநிலைய துறையிடம் ஊர் மக்கள் முறையிட்டனர். அதன் படி தேரை சரி செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்தது.
இன்று காலை 10 மணியளவில் அந்த தேரை வீதிகளில் வெள்ளோட்டம் விட்டனர். இதை காண அக்கம் பக்கம் கிராம மக்களும் பெருமளவில் குவிந்தனர். தேர்வலம் வரும் போது சேந்தமங்கலத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி நடேசன் என்பவர் தேர் போகும் போது வேகத்தை கட்டுப்படுத்த தடுப்பு கட்டை போடும் பணி செய்து வந்தார். அப்போது எதிர் பாராத விதமாக தேரில் சிக்கி படுகாயமடைந்தார் நடேசன். அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அதற்குள் அவர் உயிர்பிரிந்து போய் விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த சம்பவம் தேரோட்டம் காண வந்த பல கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.