சென்னை பனையூரில் தனியார் விடுதி ஒன்றில் அனுமதி பெறாமல் மது விருந்து நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுதொடர்பாக 500 பேரை போலீசார் சிறைபிடித்துள்ளனர்.
சென்னை பனையூரில் உள்ள தனியார் விடுதியில் திறந்தவெளி மைதானத்தில் மது விருந்து நடப்பதாக தாம்பரம் காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவின் பேரில் அங்கு சென்ற மதுவிலக்கு போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 பேர் அனுமதி பெறாமல் திறந்தவெளி மைதானத்தில் மது அருந்திக்கொண்டு போதையில் நடனமாடிக் கொண்டிருந்தனர். கலந்துகொண்டவர்களில் அதிகம்பேர் இளைஞர்கள். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆணையர் ரவி, சிறை பிடித்து வைக்கப்பட்ட இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மது விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவன மேலாளர் சைமன் என்பவரிடம் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.